உள்ளூர் செய்திகள்
சாலை மறியல்

விருத்தாசலம் திட்டக்குடி சாலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2022-05-05 12:11 GMT
விருத்தாசலம் திட்டக்குடி அருகே விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள மாளிகை கோட்டம் ஊராட்சி பாபுஜிநகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு 2008 ம் ஆண்டு இலவச மனைப்பட்டா வழங்கியவர்களுக்கு அளந்து அத்துகாட்ட வேண்டும், இடம் இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும், இடிந்து விழும் நிலையில் உள்ள பாலத்தை அப்புறப்படுத்தி புதிய பாலம் கட்டித்தர வேண்டும், கழிப்பறை வசதி செய்து தரவேண்டும், செயல்படாத நிலையில் உள்ள நூலகத்தை மாணவர்கள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23 ம் தேதி சாலை மறியல் செய்யப்போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்திருந்தனர் .

அப்போது பெண்ணாடம் போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டு திட்டக்குடி தாசில்தார் தலைமையில் நேற்று(4ந்தேதி) மாலை 3 மணி அளவில் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இரண்டு முறையும் வட்டாட்சியர் அவர்களுக்கு வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அரியலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பாலசிங்கம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திடீரென திட்டக்குடி விருத்தாசலம் மாநிலசாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, தாசில்தார் கார்த்திக், சமூக நல திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் விருத்தாசலம் திட்டக்குடி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தாசில்தார் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்ததில் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News