உள்ளூர் செய்திகள்
அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் அவதி

கடலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது- அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் அவதி

Update: 2022-05-04 11:37 GMT
அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குவதற்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் அடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து கொளுத்தி வருகிறது. இதற்கிடையில் மாவட்டத்தில் பரவலாக பல இடங்களில் மட்டும் மழை பெய்தது.

இது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை தந்தது. இருந்தபோதிலும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குவதற்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் அடித்தது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கிடையில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் இன்று (4ந்தேதி) தொடங்கியது.

இந்த கத்திரிவெயில் வருகிற 28ந் தேதி வரை தொடர உள்ளது. கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து உள்ளனர். கடலூர் நகர மக்கள் மாலை வேளையில் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு சென்று பொழுதை கழிப்பதையும் காண முடிந்தது. மேலும் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்துடன் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சென்றனர்.

இன்று வழக்கத்தை விடசூரியன் சுட்டெரித்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகல் நேரத்தில் வெளியே பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்தது. சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பெண்கள் துப்பட்டாவால் முகத்தை மூடிய படியும், குடை பிடித்தபடியும் சென்றதை காண முடிந்தது.

பெரியவர்கள் துண்டை தலையில் போட்ட படி நடந்து சென்றதையும் பார்க்க முடிந்தது. ஆண்கள் ஹெல்மெட் அணிந்தபடியும், கைக்குட்டையால் கண்கள் மட்டும் தெரியும் படி முகத்தை மூடியபடியும் சென்றனர். தாகத்தை தணிக்கும் இளநீர், தர்பூசணி விற்பனை சூடுபிடித்தது. நுங்கு, பழச்சாறு கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெயிலில் தாக்கம் மாலை வரை நீடித்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News