உள்ளூர் செய்திகள்
ஷவரில் உல்லாச குளியல் போடும் யானை

வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு- வண்டலூர் பூங்காவில் விலங்குகள், பறவைகள் மீது தொடர்ந்து தண்ணீர் தெளிப்பு

Published On 2022-05-01 07:05 GMT   |   Update On 2022-05-01 07:05 GMT
பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் நடைபாதைகளில் தண்ணீர் தெளிக்க ஆங்காங்கே மழைச்சாரல் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

வண்டலூர்:

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று மீனம்பாக்கம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 17 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இதேபோல் விலங்குகளும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. வண்டலூர் பூங்காவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குள், பறவைகள், பாம்புகள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வரும் வெயிலுக்கு இந்த விலங்குகளும் தப்பவில்லை. இதைத்தொடர்ந்து பூங்காவில் வெப்பத்தில் இருந்து விலங்குகள், பறவைகளை காக்க சிறப்பு ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அவற்றின் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

சிறுத்தைகள், புலிகள் மீது அவ்வப்போது டியூப் மூலம் தண்ணீரை ஊழியர்கள் தெளித்து வருகின்றனர். பறவைகளின் கூண்டு மேற்பகுதியில் முழுமையாக கோணிப்பைகளால் மூடி உள்ளனர். அதன் மீது குளிர்ச்சிக்காக தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இதனால் பறவைகள் வெப்பத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் விலங்குகள் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காண்டாமிருகம், நீர்யானை, வரிக்குதிரை போன்ற விலங்குகளின் பராமரிப்பு இடங்களிலும் அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்படுகிறது.

யானைகள் அங்கு அமைக்கப்பட்டு உள்ள ஷவரில் உல்லாச குளியல் போடுகின்றன. இதேபோல் கரடிகள் குரங்குகளுக்கு பழவகைகள், இளநீர் உள்ளிட்டவை அதிகமாக உணவாக வழங்கப்படுகிறது.

பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் நடைபாதைகளில் தண்ணீர் தெளிக்க ஆங்காங்கே மழைச்சாரல் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

Tags:    

Similar News