சென்னை விமான நிலையத்தில் 20 விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் நேற்று உள்நாட்டு விமானங்கள் புறப்பாடு கால தாமதமானது.காலையில் இருந்து மதியம் வரைக்கும் சுமாா் 20 க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.
ஒவ்வொரு விமானமும் 15 நிமிடத்திலிருந்து 30 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டு சென்றது.சில விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றது.சனி, ஞாயிறு வார இறுதி்நாட்கள் என்பதாலும், ரம்ஜான் பண்டிகை வருகிற செவ்வாய்கிழமை வருவதாலும், வெளியூா் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இதனால் வழக்கத்தை விட நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் பணியில் குறைவாகவே இருந்தாகவும், அவா்கள் பொறுமையாக பணியாற்றுவதால், பாதுகாப்பு சோதனை நடந்து முடிவதில் தாமதம் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
அதனால் பயணிகள் விமானங்களில் தாமதமாக சென்று ஏறுவதால், விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
மேலும் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் கம்ப்யூட்டர் இயந்திரம் சரிவர இயங்காததால், பயணிகள் போா்டிங் பாஸ்கள் வாங்குவதில் தாமதமானது.
இதே போன்று பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில், பயணிகள் பாதுகாப்பு சோதனைக்கு, கூடுதல் பாதுகாப்பு கவுண்டா்கள் ஏற்படுத்தி, கூடுதலாக பாதுகாப்பு வீரா்களை பணியமா்த்த வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனா்.
மேலும் சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி கம்ப்யூட்டர் வேகம் குறைந்து பயணிகள் பாதிக்கப்படுவது தொடா்ச்சியாக நடந்து வருகிறது. அதற்கு விமானநிலைய நிா்வாகம் நிரந்தர தீா்வை ஏற்படுத்த வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனா்.
புறப்பாடு விமானங்கள் தாமதமானாலும், வருகை விமானங்கள் அனைத்தும் குறிப்பிட்ட நேரங்களில் சரியாக வந்து சோ்ந்தன.
அதேபோல் இன்றும் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று போல் இல்லாமல் பயணிகள் துரிதமாக செல்ல தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.