உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

மதுரவாயல் சாலிகிராமத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலி

Published On 2022-04-30 12:08 IST   |   Update On 2022-04-30 12:08:00 IST
மதுரவாயல் சாலிகிராமத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

ஆவடி ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (19) பட்டதாரி வாலிபர்.

இவர் நேற்று இரவு 9மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த நரேஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பறக்கும் சாலை அமைக்கும் பணிக்காக போடப்பட்டுள்ள பில்லர் மீது வேகமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட நரேஷ்குமார் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, சாலிகிராமம் நாவலர் மெயின் ரோட்டில் கடந்த 23ந் தேதி நள்ளிரவு 12மணி அளவில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த வாலிபர் ஒருவர் திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த வாலிபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது பற்றி விபரம் ஏதும் தெரியவில்லை.

Similar News