உள்ளூர் செய்திகள்
கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கடலூர் பழைய கலெக்டர் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:
ஊராட்சியில் பணியாற்றிவரும் ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே ஊதியம் வழங்கிட வேண்டும். அவர்களின் 30 ஆண்டுகால பணி காலத்தை கருத்தில்கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கடலூர் பழைய கலெக்டர் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பாஸ்கரன், மேற்கு மாவட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் ஒன்றிய தலைவர் வேலவன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் விஜயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் மாவட்ட செயலாளர்கள் திருவேங்கடம், பிரகாஷ், பொருளாளர்கள் ரமேஷ்குமார், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.