உள்ளூர் செய்திகள்
ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

கடலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்- தலைவர் தெய்வ பக்கிரி தலைமையில் நடந்தது

Published On 2022-04-27 16:46 IST   |   Update On 2022-04-27 16:46:00 IST
எங்கள் பகுதிகளில் குளங்களை தூர்வாரி நீர் சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக் கூடத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடலூர்:

கடலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் தெய்வ பக்கிரி தலைமையிலும், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அய்யனார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, அசோக் பாபு ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:-

ரமேஷ்:- எங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

குமுதம் சேகர்:- திருமாணிக்குழி பகுதியில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த பகுதியில் தண்ணீர் பற்றாக் குறை நிலவி வருவதால், புதிதாக உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டிதர வேண்டும். மேலும் அதே பகுதியில் அரசு புறம் போக்கு நிலத்தில் தனியார் சேர்ந்த நபர்கள் அத்துமீறி செம்மண் எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முரளி:- எங்கள் பகுதியில் 110 அடிக்கு மேல் செம்மண் குவாரிகளில் மணல் எடுப்பதால் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திகேயன்:- சட்டமன்ற கூட்டத்தொடரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தும், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை சமத்துவ நாளாக அறிவித்ததற்கும், கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் தொகையை உயர்த்தி அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஞானசவுந்தரி:- எங்கள் பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் புதிதாக கட்டி தரவேண்டும்.

கிரிஜா செந்தில்:- எங்கள் பகுதியில் புதிதாக நீர்த்தேக்க தொட்டி கட்டி தரவேண்டும்

தமிழழகி அல்லாராஜ்:- எங்கள் பகுதியில் போடப்பட்டுள்ள சாலைகள் தரமற்ற சாலைகள் உள்ளது. இதனால் உடனடியாக சாலைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சுபாஷினி :- எங்கள் பகுதிகளில் குளங்களை தூர்வாரி நீர் சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக் கூடத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழழகி கணவர் அல்லாராஜ் , ஒன்றிய குழுத் தலைவரிடம் சென்று நாங்கள் வைக்கும் கோரிக்கை சம்பந்தமாக கேட்காமல் இருப்பது நியாயமா? என கேட்டார்.

அப்போது அங்கிருந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கைகள் தொடர்பாகவும், கூட்டத்திலும் ஒன்றிய கவுன்சிலர் தான் பேச வேண்டும். ஆனால் நீங்கள் எப்படி இங்கு வந்து பேசுவீர்கள் என கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் கவுன்சிலர் கணவரை வெளியில் அனுப்பி வைத்தனர்.

இவ்வாறு கூட்டத்தில் விவாதங்கள் நடைபெற்றன.

Similar News