உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கடலூர் முதுநகர்

Published On 2022-04-27 09:48 GMT   |   Update On 2022-04-27 09:48 GMT
கடலூரில் இருந்து விருத்தாசலம், சிதம்பரம், சீர்காழி, காட்டுமன்னார் கோவில், காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்வோர் கடலூர் முதுநகர் பகுதி வழியாகவே செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர்:

தமிழகத்திற்குள் நுழைந்த பிரஞ்சுகாரர்கள் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் உள்ள புனித டேவிட் கோட்டையை வாங்கினர். பின்னர் அதனை தங்கள் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர்.

இந்த சூழலில் ஆங்கிலேயர்கள் கடலூர் துறைமுகம் பகுதியில் கடல் வழி வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனால் கடலூர் முதுநகர் மற்றும் துறைமுகம் பகுதிகள் வரலாற்றில் சிறப்புமிக்க இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து காலம் செல்ல செல்ல கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதி அசுர வளர்ச்சி அடைந்து வந்தது. இதனால் முது நகர் பகுதி வளர்ச்சி அடையாமல் இருந்து வந்தது.

கடலூரில் இருந்து விருத்தாசலம், சிதம்பரம், சீர்காழி, காட்டுமன்னார் கோவில், காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்வோர் கடலூர் முதுநகர் பகுதி வழியாகவே செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்தப்பகுதியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதன் எதிரொலியாக அந்தப் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்த பகுதியில் உள்ள சாலையை கடக்க முடியாமல் பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சூழலில் கனரக வாகனங்கள் அந்த வழியாக அதிகம் செல்வதால் வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்லும் முன் மிகவும் சவாலாக உள்ளது. எனவே இதுகுறித்து கடலூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கனரக வாகனங்கள் செல்வதற்கு வேறு பாதை அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News