உள்ளூர் செய்திகள்
ஆய்வு மேற்கொண்ட மேயர் சுந்தரி ராஜா

ரூ.2.50 கோடியில் எரிவாயு மின்தகன மேடை அமைக்கும் இடம்- மேயர் சுந்தரி ராஜா ஆய்வு

Published On 2022-04-27 15:06 IST   |   Update On 2022-04-27 15:07:00 IST
மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 30, 31, 32, 33 ஆகியவைகளில் குப்பைகள் சரியாக அகற்றப்படுகிறதா? வடிகால் வாய்க்கால் குடிநீர் சரியான முறையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா? என்பதையும் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர்:

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகள், குடிநீர் வினியோகம் பணிகள், கால்வாய் சுத்தம் செய்யும் பணிகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் ஆணையாளர் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் ஆணையாளர் விஸ்வநாதன், நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி, இளநிலை பொறியாளர்கள் நாகராஜன், சண்முகம் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது காலையில் துப்புரவு பணியாளர்கள் பணிகளுக்கு வருகிறார்களா? வருகைப்பதிவேடு சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? மற்றும் துப்புரவு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுகிறார்களா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடலூர் அருகே கரையேறவிட்ட குப்பம் பகுதியில் ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் எரிவாயு தகனமேடை புதிதாக அமைப்பதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அந்த பகுதிக்கு நேரில் சென்று விரைவில் எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு பணிகள் தொடங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் கடலூர் பகுதியில் உள்ள அண்ணாமலையார் நகர் பகுதியில் 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த இடத்தையும் மாந கராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று பார்வையிட்டு பூங்கா உடனடியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 30, 31, 32, 33 ஆகியவைகளில் குப்பைகள் சரியாக அகற்றப்படுகிறதா? வடிகால் வாய்க்கால் குடிநீர் சரியான முறையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா? என்பதையும் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது மாநகராட்சி திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா, மாமன்ற உறுப்பினர்கள்சாய்துனிஷா சலீம், இளையராஜா, சங்கீதா செந்தில், பரணி முருகன், சக்திவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Similar News