உள்ளூர் செய்திகள்
போராட்டம்

அரசு மருத்துவ கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை- போராட்டத்தை தொடரும் மாணவ-மாணவிகள்

Published On 2022-04-26 15:32 IST   |   Update On 2022-04-26 15:32:00 IST
கடலூரில் அரசு மருத்துவ கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடுக்கப்பட்ட நிலையில் விடுதிகளை காலி செய்ய மறுத்து மாணவ-மாணவிகள் போராட்டத்தை தொடர்கின்றனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடைமை ஆக்கப்பட்ட பிறகு அதன் கீழ் செயல்படும் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனை தற்போது கடலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையாக இயங்கி வருகிறது.

இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவ-மாணவிகள் பிற அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தையே தங்களுக்கும் வசூலிக்கவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் புதிதாக சேரும் மாணவர்களுக்கு மட்டுமே அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் வாங்கப்படுகிறது.

ஏற்கனவே படித்துவரும் மாணவர்களுக்கு தனியார் கல்லூரிக்கு நிகரான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. தங்களுக்கும் திருத்தப்பட்ட புதிய அரசு கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று இந்த கல்லூரியில் பயிலும் 2, 3, 4-ம் ஆண்டு மாணவர்கள் கடந்த 10-ந் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து கடந்த 11-ந் தேதி முதல் 20-ந் தேதிவரை அண்ணாமலைநகரில் உள்ள மருத்துவகல்லூரி வளாகம் மற்றும் மருத்துவகல்லூரி புலமுதல்வர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 21-ந் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் கடலூர் அரசு மருத்துவகல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளார். முதலாண்டு மற்றும் 5-ம் ஆண்டு பயிலும் பயிற்சி மருத்துவர்களை தவிர மற்ற அனைவருக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு மாணவர்கள் அணைவரும் விடுதிகளை காலிசெய்ய வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் விடுதிகளை காலி செய்ய மறுத்து இன்று காலையும் மாணவ- மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனால் அவர்களுக்கு விடுதியில் இருந்து வழங்கப்படும் காலை உணவு நிறுத்தப்பட்டது. ஆனாலும் வெளியிலிருந்து உணவு வரவழைத்து சாப்பிட்ட மாணவ- மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோருடன் இந்த போராட்டம் தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அதன்பிறகு எடுக்கப்படும் நடவடிக்கை மாணவ- மாணவிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமா என்பது தெரியும்.

Similar News