உள்ளூர் செய்திகள்
பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் வேன்

கடலூர் அருகே வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பக்தர் பலி

Published On 2022-04-26 10:32 IST   |   Update On 2022-04-26 10:32:00 IST
கடலூர் அருகே விபத்தில் பக்தர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம், புதுவை அருகே உள்ள மணமேடு, கே.என்.பட்டி, மருதூர், வானமாதேவி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் ஒரு வேனில் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்த வேன் கடலூர் அருகே சோனாஞ்சாவடி என்ற இடத்தில் இன்று அதிகாலை வந்தபோது, வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறி கெட்டு ஓடிய வேன் 7 அடி ஆழ தரைப்பாலத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதில் வேனில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கதறி கூச்சலிட்டனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் விரைந்து வந்து வேனில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அவர்களில் ஒருவர் சுயநினைவு இழந்த நிலையில் இருந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப் புத்துறையினர் அனைவரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால் விழுப்புரம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி ஆனந்த் (வயது 50) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் வானமாதேவியை சேர்ந்த சந்தோஷ் (22), ஜான்சிராணி (20), நாராயணன் (22), வளர்மதி (39), பெருமாள் (47), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அரவிந்த் (30), கீதாலட்சுமி (31), சாலினி (24), மருதூரை சேர்ந்த செல்வி (41), மணமேட்டை சேர்ந்த காஞ்சனா (47), அருண் (20) மற்றும் குழந்தைகள் ரேஷ்மா (6), புவனேஷ் வரண் (5), சிவனேஷ் (1½) உள்பட 19 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இன்று அதிகாலை நடந்த இந்த விபத்து கடலூர் சோனாஞ்சாவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News