உள்ளூர் செய்திகள்
கடலூர் நகர் பகுதியில் அசுர வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் இளைஞர்களால் விபத்து அபாயம்
மோட்டார் சைக்கிள் சாகசம் செய்பவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கடலூர்:
தமிழகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்லும் இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக ஓட்டுகின்றனர்.
குறிப்பாக சென்னை முழுவதும் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் இளைஞர்கள் அதிகளவு உள்ளனர். இவர்களால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கலாச்சாரம் தற்போது கடலூர் மாவட்டத்தில் பரவி வருகிறது.
குறிப்பாக கடலூர் மாவட்ட இளைஞர்கள் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களை வாங்கி வேகமாக உலா வருகிறார்கள். இவர்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்.
தற்போது 18 வயது நிரம்பாத பள்ளி மாணவர்களும் இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டி வருகின்றனர். மோட்டார் வாகன விதிமுறைப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வாகனங்கள் ஓட்ட லைசென்ஸ் வழங்கப்படுகிறது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் சைக்கிள் ஓட்டுவது படிப்படியாக குறைந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுவது அதிகரித்துள்ளது.
இந்த பள்ளி மாணவர்கள் வீட்டில் அடம்பிடித்து அதிவேக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை வாங்கி நண்பர்களை ஏற்றிக் கொண்டு அசுர வேகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்கின்றனர்.
பள்ளி மாணவர்களின் அதிவேக பயணத்தால் விபத்துக்குள்ளாவது மட்டுமின்றி எதிரில் வரும் வாகனங்களின் மீது மோதி விபத்துக்களை ஏற்படுத்தி விடுகின்றனர். இதனால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இவர்கள் ஏற்படுத்தும் விபத்தால் சாலையோரத்தில் ஏதும் அறியாது நடந்து செல்லும் அப்பாவி பொதுமக்கள் இதில் சிக்கி தனது உயிரை இழக்கின்றனர். இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களை அதிக சத்தத்துடன் வேகமாக ஓட்டிச் செல்வதால் பொதுமக்கள் இதில் பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே மோட்டார் சைக்கிள்களை மிக வேகமாக ஓட்டிச் செல்லக்கூடிய நபர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பிடித்து அவர்களிடம் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும்.
மேலும் இதுபோன்று சென்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்க வேண்டும். இது தவிர அதிவேக மோட்டார் சைக்கிள் சாகசம் செய்பவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.