உள்ளூர் செய்திகள்
யாக சாலையில் கலசங்கள் வைக்கப்பட்டு லட்சார்ச்சனை நடந்தது

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகாருத்ரயாகம், மகாபிஷேகம்

Published On 2022-04-25 16:02 IST   |   Update On 2022-04-25 16:02:00 IST
உலக நன்மை வேண்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் சித்திரை மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு மகாருத்ர ஜப பாராயணம் மற்றும் யாகம் கணபதி பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது.
சிதம்பரம்:

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இந்த கோவிலில் சித்சபையில் உள்ள மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

சித்திரை மாத திருவோண நட்சத்திர மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் நடைபெற்றது. சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர் பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மகாபிஷேகத்தை கண்டுகளித்து தரிசித்தனர்.

உலக நன்மை வேண்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் சித்திரை மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு மகாருத்ர ஜப பாராயணம் மற்றும் யாகம் கணபதி பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நடராஜர் கோவிலில் வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு சித்சபையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு 8 மணிக்குள் உச்சிகால பூஜை நடைபெற்றது. பின்னர் 10 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் கனகசபையில் எழுந்தருளினார்.

ஆயிரங்கால் மண்டபம் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலை பந்தலில் யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 1 மணி முதல் 4 மணி வரை லட்சார்ச்சனையும், 300 பேர் பங்கேற்ற மகாருத்ர யாகம் நடைபெற்றது.

பின்னர் யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கனகசபைக்கு சென்ற பின்னர் மகாபிஷேகம் நடைபெற்றது.

மகாபிஷேக ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.

Similar News