உள்ளூர் செய்திகள்
நடுரோட்டில் தனியார் பஸ்களை நிறுத்தி கண்டக்டர்கள் மோதல்
நேர பிரச்சினையால் ஏற்பட்ட தகராறு காரணமாக நடுரோட்டில் தனியார் பஸ்களை நிறுத்தி கண்டக்டர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் நெல்லிக்குப்பம் சாலை வழியாக இன்று காலை தலைமை தபால் நிலையம் அருகே தனியார் டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சை முந்திக் கொண்டு மற்றொரு தனியார் பஸ் சென்றது. அப்போது தனியார் பஸ்சை டிரைவர் நடுரோட்டில் திடீரென்று நிறுத்தினார். பின்னர் அந்த பஸ்சில் இருந்து கண்டக்டர் கீழே இறங்கி , மற்றொரு பஸ்சில் இருந்த கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் எங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் எப்படி நீங்கள் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லலாம் எனக்கூறி, முதலில் வந்த பஸ் செல்லாத வகையில் மற்றொரு பஸ்சை வழி மறித்து நிறுத்தினார்.
இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உங்கள் நேர பிரச்சினையை நீங்கள் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். பஸ்சை இப்படி நிறுத்தினால் நாங்கள் எப்படி பயணிப்பது என கூறி, கண்டக்டரிடம் கேட்டனர். அப்போது கண்டக்டர்- பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து பஸ்சை இயக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் கூறியதால் அங்கிருந்து அவசரஅவசரமாக தங்கள் பஸ்களை எடுத்துக் சென்றனர்.
மேலும் அங்கு அதிக அளவில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் பஸ்கள் இயக்குவதற்கு நேரம் இருக்கும் நிலையில் அவர்களுக்குள் பல்வேறு தகராறு இருந்து வரும் நிலையில் பஸ்களில் பயணிகள் இருக்கும் நிலையில் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி இது போன்ற தகராறில் ஈடுபட்டால், பயணிகளுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்.
இந்த தகராறு அடிதடியாக மாறினால் பொதுமக்களின் நிலை என்ன? என்பதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.