உள்ளூர் செய்திகள்
கொளுத்தும் வெயில்

தமிழகத்தில் வேலூர் உள்பட 7 மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயில்

Published On 2022-04-25 11:28 IST   |   Update On 2022-04-25 11:28:00 IST
தமிழகத்தில் வேலூர் உள்பட 7 நகரங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 103 டிகிரி பதிவானது.
வேலூர்:

தமிழகத்தில் வெயில் அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் வேலூர் முன்னணியில் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் கொளுத்த தொடங்கும் வெயில் ஆகஸ்டு மாதம் வரை வாட்டி வதைக்கும். அதன்படி, இந்த ஆண்டின் வெயில் தாக்கம் கடந்த பிப்ரவரி மாதமே அதிகரிக்க தொடங்கியது. பிப்ரவரி 15-ந் தேதிக்கு பிறகு வெயில் அளவு படிப்படியாக உயர தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, வேலூரில் மார்ச் மாதம் தொடக்கத்தில் 90 டிகிரியை கடந்தது. மார்ச் 11-ந் தேதிக்கு பிறகு 100 டிகிரியை தொட்டது. அதற்கு பின் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 16-ந் தேதி 103.3 டிகிரி வெயில் பதிவானது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்த வெயில் 21-ந் தேதியிலிருந்து தொடர்ந்து 3 நாட்கள் தாக்கம் குறைவாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் வெயில் கோரத்தாண்டவம் ஆடியது. நேற்று வேலூரில் 102.2 டிகிரி வெயில் பதிவானது.

தமிழகத்தில் வேலூர் உள்பட 7 நகரங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 103 டிகிரி பதிவானது. மதுரை, திருச்சி, கரூர் பரமத்தி, சேலம், தஞ்சாவூரில் தலா 100 டிகிரி பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 96 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 95 டிகிரியும் பதிவானது. தமிழகத்தில் கூடுதலாக வெயில் சுட்டெரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயில் கோரத்தாண்டவத்தால் தேசிய நெடுஞ்சாலைகளில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். வெயில் அளவு அதிகரிக்க தொடங்கியதால் பகலில் மக்கள் நடமாட்டம் குறைய தொடங்கி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் இரவில் புழுக்கம் அதிகரித்துள்ளது. வெயில் காலம் தொடங்கியதால் மாவட்டத்தில் ஆங்காங்கே பழச்சாறு கடைகள், கரும்புச்சாறு, கேழ்வரகு கூழ், தர்பூசணி, முலாம்பழம் போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Similar News