உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை மிரட்டி நகை, பணம் கொள்ளை

Published On 2022-04-23 15:44 IST   |   Update On 2022-04-23 15:44:00 IST
வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
அணைக்கட்டு:

அணைக்கட்டு அடுத்த கண்ணிகாபுரம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

இவரது மனைவி சித்ரா (வயது 54), அரசு பள்ளி ஆசிரியர். இவர்களது மகள் வினி வர்ஷா (22). சம்பவத் தன்று மகாலிங்கமும், சித்ராவும் வேலை சம்பந்தமாக வெளியே சென்றிருந்தனர். வினி வர்ஷா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் 2 பேர் வீட்டிற்குள் நுழைந்தனர். 

அவர்களை பார்த்ததும் இளம்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டியதும் இளம்பெண் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து அணைக் கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வேலூர் ஏ.டி.எஸ்.பி. தலைமையில் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் ஆய்வு செய்தனர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவு செய்தனர். விசாரணையில் பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. 

இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Similar News