உள்ளூர் செய்திகள்
குடியாத்தத்தில் தீ விபத்து ஏற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலை.

குடியாத்தத்தில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

Published On 2022-04-23 15:37 IST   |   Update On 2022-04-23 15:37:00 IST
குடியாத்தத்தில் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீயை 2 மணி நேரம் போராடி தீயணைப்புதுறையிளனர் அணைத்தனர்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் கூடநகரம் ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த தீப்பெட்டி தொழிற்சாலையில் ஒரு பகுதியில் உள்ள கட்டிடத்தின் தரைதளத்தில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டி பண்டல்கள், மாடியில் தீப்பெட்டி தயாரிக்க தேவையான குச்சிகள், மெழுகு உள்ளிட்டவை உள்ளன. நேற்று மாலை வழக்கம் போல் பணியாளர்கள் பணி முடித்து வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

இரவு சுமார் 8 மணி அளவில் இந்த தீப்பெட்டி தொழிற்சாலையின் மாடியில் திடீரென தீப்பற்றி கொண்டது. மாடியிலிருந்த தீப்பெட்டி பண்டல்கள் தீக்குச்சிகள் மெழுகு உள்ளிட்டவை பயங்கரமாக எரிய தொடங்கின.

இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடினர். 

அதற்குள் தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் பேர்ணாம்பட்டிலிருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் வந்தது இடையில் 15 நிமிடம் தண்ணீர் இல்லாததால் தீப்பெட்டி தொழிற்சாலை மீண்டும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதனை தொடர்ந்து பேர்ணாம்பட்டிலிருந்து வந்த தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் தனியார் டிராக்டர்கள் மூலமும் தண்ணீர் பாய்ச்சி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. 

மேலும் தீ பரவாமல் தடுக்கவும், விபத்தை தடுக்கும் வகையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் மற்றொரு கட்டிடத்தில் தயார் நிலையில் இருந்து பல லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் வாகனங்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலையின் தீ தடுப்பு பணிகளை குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் நத்தம்பிரதீஷ், ஊராட்சி மன்ற தலைவர் அமுலுஅமர், நகரமன்ற உறுப்பினர்கள் ம.மனோஜ், நவீன்சங்கர், சி.என்.பாபு உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கு என்ன காரணம் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News