உள்ளூர் செய்திகள்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு நாளை மகாருத்ர மகாபிஷேகம்

Published On 2022-04-23 15:36 IST   |   Update On 2022-04-23 15:36:00 IST
ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது.
சிதம்பரம்:

பூலோக கைலாயம் என சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் அழைக்கப்படுகிறது. ஸ்ரீநடராஜர் கோவிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாகும்.

ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனக சபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

சித்திரை மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் நாளை (24-ந் தேதி) மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது. மகாபிஷேகத்தை முன்னிட்டு காலை மகாருத்ரயாகம் மற்றும் வைபவம் நடைபெறுகிறது. மகாபிஷேக ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.

Similar News