உள்ளூர் செய்திகள்
போராட்டம் ஒத்திவைப்பு

அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு- சிதம்பரம் ரெயில் நிலையம் முன்பு மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

Published On 2022-04-22 15:01 IST   |   Update On 2022-04-22 15:01:00 IST
அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சிதம்பரம் ரெயில் நிலையம் முன்பு நடக்கவிருந்த மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
சிதம்பரம்:

சிதம்பரம் நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ரெயிலடி இந்திரா நகரில் தென்னக ரெயில்வே துறையினர் மற்றும் சிதம்பரம் ரெயில்வே துறை யினர் சிதம்பரம் ரெயில்வே காலனியில் சுற்றுச்சுவர் கட்ட உள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் சிதம்பரம் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் சிதம்பரம் தென்னக ரெயில்வே துறையினரையும். ரெயிலடி இந்திரா நகர் பொதுமக்களையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது.

ரெயில்வே இன்ஸ்பெக்டர் அருண்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, நகராட்சி துணை சேர்மன் முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்ட முடிவில் கீழ்க்கண்டவாறு முடிவுகள் எடுக்கப்பட்டது:-

சம்மந்தப்பட்ட இடத்தினை ரெயில்வே துறையினருடன் நில அளவையர் மூலம் அளவீடு செய்து பொதுமக்களுக்கு எவ்வளவு இடம் தேவை என அளந்து திருச்சி ரயில்வே கோட்ட மானேஜருக்கு கருத்துருவை அனுப்பி சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் மூலமாக மாவட்ட கலெக்டருக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேற்படி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரெயில்வே சுற்றுச்சுவர் கட்டும் பணி ரெயில்வே துறையினரால் தற்காலிகமாக 30 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Similar News