உள்ளூர் செய்திகள்
பல்லவர்கால கொற்றவை சிற்பம்

பண்ருட்டி அருகே 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர்கால கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

Published On 2022-04-22 14:49 IST   |   Update On 2022-04-22 14:49:00 IST
உளுந்தாம்பட்டு கிராமத்தின் ஏரிக்கரையில் உள்ள கொற்றவை சிற்பம் ஒரு பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 70 செ.மீ, அகலம் 35 செ.மீ, ஆகும். கொற்றவை நேராக நின்ற நிலையில் இருக்கிறாள்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், வரலாற்று ஆர்வலர்கள் உளுந்தாம்பட்டு பத்மநாபன், கவியரசன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர், அப்பொழுது உளுந்தாம்பட்டு ஏரியின் உள்ளே பலகை கல்லில் பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை சிற்பத்தை கண்டறிந்தனர்,

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது:-

உளுந்தாம்பட்டு கிராமத்தின் ஏரிக்கரையில் உள்ள கொற்றவை சிற்பம் ஒரு பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 70 செ.மீ, அகலம் 35 செ.மீ, ஆகும். கொற்றவை நேராக நின்ற நிலையில் இருக்கிறாள்.

தலையில் கரண்ட மகுடம், காதுகளில் பனைஓலை, கழுத்தில் சவடி, சரபளி அணிகலன்கள், மார்பில் சன்னவீரத்துடன் காணப்படுகிறாள். மார்புக்கச்சை தோள்பட்டையுடன் கட்டப்பட்டுள்ளது.

பின்புறம் சூலாயுதம் இருக்கிறது. இடதுபுறம் கலைமான் வாகனமாகக் காட்டப்பட்டுள்ளது. எட்டுக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள் கொற்றவை. இடது பின் கரங்களில் சங்கு, வில், கேடயமும், இடது முன் கரம் கடியஸ்த நிலையிலும் உள்ளது. வலது பின்கரங்களில் எறிநிலைசக்கரம், வாள், மணி காட்டப்பட்டுள்ளது. வலது முன் கரம் அபய முத்திரையில் உள்ளது. கைகளில் வளையல் உள்ளது, கொற்றவையின் கால் அருகே தன் தலையைத் தானே அரிந்து பலியிட்டுக்கொள்ளும் நவக ண்டவீரன் ஒருவன் இருக்கிறான். இடது பக்கம் வணங்கிய நிலையில் அடியார் ஒருவர் இருக்கிறார். கால்களில் கழலும், சிலம்பும் உள்ளது. காலடியில் எருமையின் தலை காட்டப்பட்டுள்ளது என்றார்.

Similar News