உள்ளூர் செய்திகள்
ஆபத்தான சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
திருமருகல் அருகே மத்தளங்குடி-பில்லாளியில் ஆபத்தான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சி மத்தளங்குடி, அனவாசநல்லூர், பில்லாளி கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேற்கண்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலை உள்ளது.இந்த சாலை 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலை.மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த சாலை வழியாக பில்லாளி வந்து அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பயத்தாங்குடி, திருமருகல், திருக்கண்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வந்தனர்.
அதேபோல் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள் இந்த வழியாக சென்று திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.இந்த நிலையில் பில்லாளி செல்லும் 3 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் ஜல்லிகற்களில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.