உள்ளூர் செய்திகள்
பக்தர்கள் கையில் குழந்தையுடன் பறக்கும் காவடியில் வந்து நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி.

சேத்துப்பட்டில் சித்திரை விழாவில் பக்தர்கள் பறக்கும் காவடியில் நேர்த்திக்கடன்

Published On 2022-04-20 10:16 GMT   |   Update On 2022-04-20 10:16 GMT
சேத்துப்பட்டு அருகே மாரியம்மன் கோவில் சித்திரை விழாவில் பக்தர்கள் கையில் குழந்தையுடன் பறக்கும் காவடியில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த குப்பம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்திரை மாத கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது. காலையில் மகா மாரியம்மனுக்கு நெய், சந்தனம், குங்குமம், விபூதி, இளநீர், ஆகியவை மூலம் பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. 

மகாமாரி-யம்மனை பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து டிராக்டரில் வைத்து நேர்த்திகடனாக விரதம் இருந்த இளைஞர்கள் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கொண்டு டிராக்டரை இழுத்தவாறு முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். 

குப்பம் கிராமத்தில் உள்ள மாட வீதியாக மகாமாரி அம்மன் வீதி உலா நடந்தது. மகா மாரியம்மன் பூ கரகம் ஜோடிக்கப்பட்டு பம்பை உடுக்கை மேளதாளத்துடன் மகாமாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தது.

பின்னர் கோவில் முன்பு 40 அடி உயரத்தில் ஊஞ்சல் அமைக்கப்பட்டு மகா மாரியம்மன் பல்வேறு வண்ண மலர் அலங்கா-ரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

அப்போது பக்தர்கள் பறக்கும் காவடியில் ஊஞ்சலில் கையில் குழந்தையுடன் பறந்து வந்து மகா மாரியம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது மலர்களை தூவினர். பின்னர் கோவிலின் முன்பு வைக்கப்-பட்டிருந்த கொப்பரையில் பெண்கள் வீட்டில் இருந்து கூழ் கொண்டு வந்து அதில் ஊற்றினர். பின்பு மகா மாரியம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு கூழை பிரசாதமாக  வழங்கினர்.

பின்னர் இரவில் மகா மாரியம்மன் வீதி உலா வந்தார்.  இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குப்பம் கிராம நாட்டாண்மை தாரர்கள் விழாக்குழுவினர் இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News