உள்ளூர் செய்திகள்
அப்பர் கரையேறும் நிகழ்ச்சி

கடலூர் கரையேறவிட்டகுப்பத்தில் கல்லை தெப்பமாக்கி அப்பர் கரையேறும் நிகழ்ச்சி

Published On 2022-04-19 15:47 IST   |   Update On 2022-04-19 15:47:00 IST
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் இருந்து விநாயகர், அப்பர், பெரியநாயகி உடன் பாடலீஸ்வரர் ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளி தேரடி தெரு, வண்டிப்பாளையம் மெயின்ரோடு வழியாக கரையேறவிட்டகுப்பம் வந்தடைந்தார்.
கடலூர்:

தமிழகத்தை 1,300 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட மகேந்திரவர்ம பல்லவ மன்னர், சமண சமயவாதிகளின் தூண்டுதலால் திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி கடலில் வீசி எறிந்தார்.

அப்போது ‘சொற்றுணை வேதியன் சோதிவானவன்’ எனத்தொடங்கும் நமச்சிவாய பதிகம் பாடி, அந்த கல்லையே தெப்பமாக கொண்டு அப்பர் கரை சேர்ந்து, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்பாளை வழிபட்டார் என்று வரலாறு கூறுகிறது. அப்பர் கரையேறிய இடம் தான் இப்போது கரையேறவிட்டகுப்பம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அப்பர் கரையேறிய இடத்தில் அவருக்கு தனியாக கோவில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கோவிலில் இன்று அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் இருந்து விநாயகர், அப்பர், பெரியநாயகி உடன் பாடலீஸ்வரர் ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளி தேரடி தெரு, வண்டிப்பாளையம் மெயின்ரோடு வழியாக கரையேறவிட்டகுப்பம் வந்தடைந்தார்.

தொடர்ந்து பாடலீஸ்வரருக்கு பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு அங்குள்ள குளத்தில் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் தெப்பத்தில் அப்பர் வலம் வந்தார். பிறகு அப்பர் கரையேறி அங்குள்ள மண்டபத்தில் தீபாராதனை நடந்தது.

இதையடுத்து புதுவண்டிப்பாளையம் வீதி, அப்பர் சாலை, பழைய வண்டிப்பாளையம் கற்பக விநாயகர் கோவில் வீதி வழியாக சென்று வாகீசர் மண்டகப்படியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

அதன்பிறகு பாடலீஸ்வரர், பெரியநாயகி, விநாயகர் சாமிகள், அப்பருடன் திருப்பாதிரிப்புலியூர் கோவிலை சென்றடைந்தனர்.

விழாவில் வண்டிப்பாளையம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Similar News