உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வேப்பூர் தாசில்தாரை கண்டித்து தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ.க்கள் போராட்டம்

Published On 2022-04-19 09:59 GMT   |   Update On 2022-04-19 09:59 GMT
கடந்த 13-ம் தேதி நிலுவையிலுள்ள புள்ளி விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வி.ஏ.ஓ.க்களுக்கு வாட்ஸ் அப்பில் தாசில்தார் மோகன் உத்தரவிட்டார்.

வேப்பூர்:

கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகாவில் 53 வருவாய் கிராமங்கள் உள்ளது. கிராம தாய் பதிவேடு விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்வதில், மற்ற தாலுக்ககாளை விட வேப்பூர் தாலுக்கா பின் தங்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கண்டித்துள்ளது.

இதனால், கடந்த 13-ம் தேதி நிலுவையிலுள்ள புள்ளி விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வி.ஏ.ஓ.க்களுக்கு வாட்ஸ் அப்பில் தாசில்தார் மோகன் உத்தரவிட்டார். இது குறித்து தாசில்தார் மற்றும் வி.ஏ.ஓ.க்களுக்கு இடையே வாட்ஸ் அப்பில் வாக்குவாதம் நடைபெற்றது . அதில், வி.ஏ.ஓ.க்கள் தரப்பில் தாசில்தாரை ஒருமையில் பேசியதாகவும், தாசில்தார் தரப்பில் சில வி.ஏ.ஓ.க்களின் செயல்பாடுகளுக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டுமென பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

அதனால் தாசில்தார் மோகனின் செயல் பாடுகளை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று வி.ஏ.ஓ. கலையரசன் தலைமையில் அனைத்து வி.ஏ.ஓ.க்களும் வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன், வேப்பூர் தாசில்தார் மோகனிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதில், இரண்டு தரப்பிலும் தங்களது செயல்பாட்டுக்கு வருத்தம் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News