உள்ளூர் செய்திகள்
கலெக்டர் முருகேஷ்

ஊராட்சி நிதியில் முறைகேடு- கரைபூண்டி பஞ்சாயத்து தலைவர் அதிகாரம் பறிப்பு: கலெக்டர் அதிரடி நடவடிக்கை

Published On 2022-04-19 15:13 IST   |   Update On 2022-04-19 15:13:00 IST
கலெக்டரின் உத்தரவின் பேரில் ஊராட்சி கணக்கு எண் 1 மற்றும் 2 முதல் 9 வரை உள்ள அனைத்து ஊராட்சிகளின் கணக்குகளை முடக்கம் செய்து மேலும் அவருக்கு அளித்த அதிகாரம் பறிக்கப்பட்டது.

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கரைபூண்டி ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா என்பவர் பதவி வகித்து வந்தார்.

இவர் ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கரைபூண்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 2வது வார்டு வேலு, 8-வது வார்டு பிரபாகரன், ஆகியோர் கலெக்டர் முருகேசனிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.

இதையடுத்து கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில். கூடுதல் கலெக்டர் பிரதாப், ஊராட்சிகளின் செயலர் அறவாழி, உதவி இயக்குனர் சுரேஷ், (ஊராட்சி) சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகோபால், கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு கரைபூண்டி ஊராட்சியில் நிதி குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

இதில் ஊராட்சி கணக்கு எண் 1 மற்றும் 2 முதல் 9 வரை உள்ள கணக்குகளில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. முறைகேடு குறித்து கரைபூண்டி ஊராட்சி மன்ற தலைவர் இந்திராவிடம், விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு முறையான விளக்கம் அளிக்காததால் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் ஊராட்சி கணக்கு எண் 1 மற்றும் 2 முதல் 9 வரை உள்ள அனைத்து ஊராட்சிகளின் கணக்குகளை முடக்கம் செய்து மேலும் அவருக்கு அளித்த அதிகாரம் பறிக்கப்பட்டது.

மேலும் கரைபூண்டி ஊராட்சி மன்றத்திற்கு தனி அலுவலராக சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் என்பவரை நியமித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Similar News