வளசரவாக்கத்தில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 33 பவுன் நகை-பணம் கொள்ளை
போரூர்:
சென்னை வளசரவாக்கம் வேலன் நகர் 7வது தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (45) தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் இவரது மனைவி ரம்யா.
தினேஷ்குமார் கடந்த வாரம் பணி நிமித்தமாக ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து ரம்யா வீட்டை பூட்டிவிட்டு ஆழ்வார் பேட்டையில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் தினேஷ்குமார் வீட்டிற்கு வந்த வேலைக்கார பெண் அம்சா வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி ரம்யாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரம்யா விரைந்து வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 33 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் கொள்ளையர்கள் சுருட்டி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.