உள்ளூர் செய்திகள்
தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர் அருகே திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

Update: 2022-04-17 09:19 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது30). இவருடைய மனைவி ரஞ்சிதா (28). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2ஆண்டுகள் ஆகின்றன.இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

ரஞ்சித் குமார் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். கும்மிடிப்பூண்டி பகுதியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக ரஞ்சித் குமார் ரஞ்சிதாவிடம் போனில் தொடர்பு கொண்டு பேசாததால் ரஞ்சிதா மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கும்மிடிப்பூண்டியில் வேலை செய்யும் ரஞ்சித்குமார் இரண்டு நாட்களுக்கு பின்பு ரஞ்சிதாவுக்கு தொடர்ந்து போன்செய்தும் ரஞ்சிதா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ரஞ்சித் குமார் பக்கத்து வீட்டில் குடியிருப்பவருக்கு போன் செய்து ரஞ்சிதா போனை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரஞ்சிதா வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரஞ்சிதா புடவையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் பிணமாக காணப்பட்டார்.

போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரஞ்சித்குமாருக்கும், ரஞ்சிதாவுக்கும் திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது.

Tags:    

Similar News