உள்ளூர் செய்திகள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்

4 நாட்கள் தொடர் விடுமுறை- ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-04-14 10:32 IST   |   Update On 2022-04-14 10:32:00 IST
தமிழ்புத்தாண்டு, நாளை புனிதவெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதை முன்னிட்டு ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் தினமும் வந்து சென்றாலும் கோடை விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த சில வாரங்களாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தமிழ்புத்தாண்டு, நாளை புனிதவெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதை முன்னிட்டு ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

நேற்று மாலை முதலே தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக ஊட்டிக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

இன்று காலை ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்காவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அங்குள்ள புல்தரையில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தும் தங்களது பொழுதை கழித்தனர்.

இதேபோல் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், முதுமலை புலிகள் காப்பகம், நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டமே காணப்பட்டது.

ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதேபோல் பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சிகளும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

ஊட்டியில் உள்ள லாட்ஜ், காட்டேஜ்கள் மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ்களிலும் அறைகள் முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. பெரும்பாலான லாட்ஜ்கள், விடுதிகளில் அறைகள் அனைத்தும் புக்கிங் ஆகிவிட்டது.

வரும் நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சுற்றுலாவை நம்பி வியாபாரம் செய்து வரும் தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar News