உள்ளூர் செய்திகள்
துடைப்பம் தயாரிக்கும் பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க துடைப்பம் பயிற்சி

Published On 2022-04-13 15:29 IST   |   Update On 2022-04-13 15:29:00 IST
தாளவாடி உள்ளிட்ட மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.
ஈரோடு:

தாளவாடி உள்ளிட்ட மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி உள்ளிட்ட மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அந்த பகுதியில் நேரடியாக சென்று ஆய்வு செய்து அப்பகுதி மலைவாழ் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

குறிப்பாக அப்பகுதி மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்தார்.

தாளவாடி மலையில் அமைந்துள்ள தலமலை கிராமத்துக்கு உட்பட்ட ராமரணை கிராமத்தில் அதிகளவில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்கள் உரிய தொழில் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இவர்கள் வசிக்கும் பகுதியை ஒட்டி மலைப்பகுதியில் சீமாறு (துடைப்பம்) செய்யும் ஒரு வகை புல் விளைகிறது. இதனை அவர்கள் சேகரித்து சமவெளிப் பகுதியில் உள்ள இடைத்தரகர்களிடம் விற்று அதில் வரும் வருவாயில் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

அவர்களிடம் குறைந்த விலைக்கு சீமாறு புல் வாங்கி வந்து அதனை இடைத்தரகர்கள் சீமாறாக செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.

இதனை அறிந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மலைவாழ் மக்களுக்கு உதவ முன்வந்தார்.

அதன் அடிப்படையில் ராமரணை மகளிர் சுய உதவி குழுவின் 17 உறுப்பி னர்களுக்கு ஈரோட்டிலிருந்து துடைப்பம் தயாரிக்கும் நபர்களை கொண்டு தொடர்ந்து 3 நாட்களுக்கு துடைப்பம் தயாரிக்க உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிகளின் மூலம் ராமரணை பழங்குடியின மக்கள் 3 வகையான துடைப்பங்களை நாளொன்றுக்கு 15 முதல் 20 வரை தயார் செய்து ரூ.750 முதல் ரூ.1000 வரையிலும் விற்பனை செய்து அவர் களது வாழ் வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். 

இந்த தொழிலுக்காக மகளிர் திட்டத்தின் மூலம் ரூ. 75 ஆயிரம் நிதி உதவியும் இந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கும் வழங்கப் பட்டுள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தலா ரூ.40 மதிப்பில் 1344 துடைப்பங் களும், தலா ரூ.45 மதிப்பில் 378 துடைப்பங்களும், தலா ரூ.50 மதிப்பில் 935 துடைப்பங்களும் என மொத்தம் 2657 துடைப்பங்களும் ரூ.1, 17,520 மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமலை ஊராட்சிக்குட்பட்ட ராமரணை மலை கிராமத்தில் வசிக்கும் கீதா என்பவர் கூறியதாவது:

எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நான் ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒட்டாரம் தலமலை ஊரா ட்சிக்குட்பட்ட ராமரணை மலை கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் 15 பேர் சேர்ந்து ராமரணை மகளிர் சுய உதவிக்குழு 2016&ல் தொடங்கினோம். 

எங்கள் ஊரில் கூலி வேலை கிடைப்பது மிக அரிது. எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தது.

வனத்திலிருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு எங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தேன். வனத்திலுள்ள புல்லினை எடுத்து வந்து ரூ.150 முதல் ரூ. 200 வரை மட்டுமே வருவாய் ஈட்ட முடிந்தது. 

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கடந்த வருடம் ஜூலை மாதம் 24&ந் தேதி எங்கள் கிராமத்திற்கு வந்த போது எங்கள் வாழ்வாதாரம் பெருக உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

இதன் பின்னர் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் ஈரோடு மகளிர் திட்டம் மூலமாக சீமார் புல்லினை கொண்டு துடைப்பம் தயாரிக்க பயிற்சி வழங்கப்பட்டது.

சீமார் செய்ய கற்றுக் கொண்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சீமார் செய்ய ஆரம்பித்தேன். தற்போது ஒரு கிலோ சீமார் புல்லில் 2 துடைப்பம் தயாரித்து ஒரு கிலோவிற்கு ரூ.80 வீதம் வருமானம் கிடைக்கிறது.

நாளொன்றுக்கு 15 முதல் 20 துடைப்பங்கள் கட்டி அதன் மூலம் ரூ.600 முதல் ரூ.800 வரை சம்பாதிக்கிறேன். இதனால் என் குடும்ப வருமானம் பெருகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News