தாளவாடியில் கொட்டித்தீர்த்த கோடை மழை
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை வெயில் ஆரம்பிக்கும் முன்பே மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் வழக்கம் போல் காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. மாலை 5 மணிக்கு பிறகு பல்வேறு இடங்களில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.
மாநகர் பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் சாரல் மழை பெய்தது. அதேபோல் இரவு 7 மணி அளவிலும் லேசான சாரல் மழை பெய்தது. ஆனால் பெரிதாக மழை ஏதும் பெய்யவில்லை.
ஆனால் அதே சமயம் புறநகர் மாவட்ட பகுதிகளான தாளவாடியில் நேற்று மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஆகும் சூழ்நிலை நிலவியது. தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் குண்டேரிபள்ளம், பவானி, மொடக்குறிச்சி, எலந்தகுட்டை, பவானிசாகர் ஆகிய பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
சென்னிமலை பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை மிக கடுமையான கோடை வெயில் அடித்தது மக்கள் தாங்க முடியாத வெப்பத்தில் தவித்தனர். மாலை 6 மணிக்கு வானம் இருண்டு திடீரென கோடை மழை பெய்ய தொடங்கியது.
இதில், சென்னிமலை அடுத்துள்ள பசுவ பட்டியிலும் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது தேவராஜ் என்பவர் தோட்டத்தில் திடீரென விழுந்த இடியில் பச்சை தென்னை மரங்கள் தீ பற்றி எரிந்தது. நல்ல வேளையாக அருகில் வீடு இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப் பட்டது. மேலும் மரங்கள் தள்ளித்தள்ளி இருந்ததால் தீ தோட்டம் முழுவதும் பரவாமல் 2 மரங்கள் மட்டும் முழுமையாக பற்றி எரிந்து அணைந்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
தாளவாடி-13.5, குண்டேரிபள்ளம் 2.6, பவானி - 2.4, மொடக்குறிச்சி -2.2, எலந்தகுட்டை-2.2, பவானிசாகர்-1.