உள்ளூர் செய்திகள்
மகளிர் குழு கைவினை பொருட்கள் கண்காட்சியை கூடுதல் கலெக்டர் பிரதாப் பார்வையிட்ட போது எடுத்த படம்.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மகளிர் குழு பெண்கள் தயாரிக்கும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி

Published On 2022-04-12 15:20 IST   |   Update On 2022-04-12 15:20:00 IST
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மகளிர் குழு பெண்கள் தயாரிக்கும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வார்கள். 

இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி காலம் வருகிற 16-ந் தேதி அதிகாலை தொடங்கி 17-ந் தேதி அதிகாலை வரை இறுப்பதால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் திருவண்ணாமலையை அடுத்த வேங்கிகாலில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை மகளிர் குழு பெண்கள் தயாரித்த கைவினை பொருட்களின் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. 

இந்த கண்காட்சியை கூடுதல் கலெக்டர் பிரதாப் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அவர் மகளிர் குழு பெண்கள் தயாரித்த பொருட்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும் சில பொருட்களை மகளிர் குழுவினர் தயாரிக்க ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த கண்காட்சியில் ஜவ்வாது மலையில் கிடைக்கும் தேன், சாமை உள்ளிட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் மகளிர் குழுவினர் தயாரித்த தின்பண்டங்கள் மற்றும் எண்ணெய் வகைகள், ஒயர்களால் பின்னப்பட்டிருந்த அழகியகூடைகள், பட்டுச் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம்பெற்றிருந்தன. 

கண்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் சுலைமான், வட்டார இயக்க மேலாளர் ஆனந்தன் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News