உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை நகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்
திருவண்ணாமலை நகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை அவசர மற்றும் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி வரவேற்றார். கூட்டத்தில் 38 நகர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதில் அ.தி.மு.க. சார்ந்த 6 உறுப்பினர்களில் 4 பேர் சொத்துவரி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்து வந்தனர். இதில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட சொத்துவரி சீராய்வு செய்தற்கான குழு பல்வேறு காரணிகளை ஆராய்ந்து தற்போது சொத்துவரி சீராய்வு செய்து அவசியம் என அரசிற்கு பரிந்துரை செய்து உள்ளது. இதையடுத்து சொத்துவரி, காலிமனை வரி சீராய்வு செய்வதற்கான குழுவின் பரிந்துரைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
சொத்துவரி உயர்வு காரணிகள் குறித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 16 இடங்களில் உள்ள இலவச கழிவறைகள் பொதுமக்கள் நன்கு சுகாதாரத்துடன் பயன்படுத்தும் வகையில் கட்டண கழிவறைகளாக மாற்றம் செய்வது, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தற்காலிக பஸ் நிலைகளில் குடிநீர் விநியோகம், மின்விளக்கு வசதிகள், கழிப்பிட வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்வது, குடிநீர் வசதிக்காக குழாய்கள், ஆழ்துளைகள் அமைப்பது, சாலை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர் பழனி பேசுகையில், தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக சொத்து வரி உயர்த்த மாட்டோம் என்று தெரிவித்தனர். தற்போது சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.
எனவே சொத்து வரி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளி நடப்பு செய்கிறோம் என்று அ.தி.மு.க. வை சேர்ந்த 6 வார்டு உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து மற்ற வார்டு உறுப்பினர் ஒப்புதலின் பேரில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இதில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.