உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

திருவண்ணாமலையில் சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-11 15:48 IST   |   Update On 2022-04-11 15:48:00 IST
திருவண்ணாமலையில் சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி அ.ம.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:

தமிழகத்தில் சொத்து வரி உயர்வை திடீரென 150 சதவீதம் உயர்த்தியது கண்டித்தும், வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் அம்மா முன்னேற்ற கழகம் சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பரந்தாமன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் நெடுமாறன், திருவண்ணாமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேஸ்வர ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அருணை எம்.கோவிந்தன் 21-வது வட்ட செயலாளர் அருண் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது “தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ள 150 சதவீத சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். பொதுமக்களை பாதிக்கும் இது போன்ற அதிகவரி உயர்வு நடவடிக்கையை கைவிட வேண்டும். 

மேலும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்“ என்று கோஷம் எழுப்பப்பட்டது. 

பின்னர் மாவட்டச் செயலாளர் பரந்தாமன் கூறும்போது, மக்கள் பிரச்சினைக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் களத்தில் இறங்கி போராடும். மத்திய, மாநில அரசுகள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க வேண்டும். தமிழகத்தில் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News