உள்ளூர் செய்திகள்
சுதா சே‌ஷய்யன்

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் நீட்டிப்பு

Published On 2022-04-11 04:29 GMT   |   Update On 2022-04-11 04:29 GMT
எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சே‌ஷய்யனுக்கு வருகிற டிசம்பர் 30-ந் தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்கி கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் 10-வது துணைவேந்தராக டாக்டர் சுதாசே‌ஷய்யன் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந் தேதியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.ஏஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம், உறுப்பினர்களாக மைசூர் ஜெ.எஸ்.எஸ். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைவேந்தர் பி.சுரேஷ், போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையத்தின் இதயநல சிகிச்சை துறை இயக்குனர் எஸ்.தணிகாசலம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். துணைவேந்தர் பொறுப்புக்கு மொத்தம் 37 பேர் விண்ணப்பித்தனர். அதில் 3 பேரின் பெயரை இறுதி செய்து கவர்னரின் முடிவுக்கு தேர்வுக்குழு அனுப்பியது. அதில் யாராவது ஒருவர் புதிய துணைவேந்தராக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் தற்போதைய துணைவேந்தர் டாக்டர் சுதா சே‌ஷய்யனுக்கு வருகிற டிசம்பர் 30-ந் தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்கி கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் அடுத்த துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக புதிய குழு ஒன்றை அமைக்குமாறு தமிழக அரசுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவின் மூலம் புதிதாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு புதிய துணை வேந்தரை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் அடுத்த ஓரிரு மாதங்களில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Tags:    

Similar News