உள்ளூர் செய்திகள்
விழாவிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பல்கீஸ் பேசிய காட்சி

பெரம்பலூர் கோர்ட்டில் 17வது ஆண்டு சமரச விழா

Published On 2022-04-10 14:34 IST   |   Update On 2022-04-10 14:34:00 IST
பெரம்பலூர் கோர்ட்டில் 17வது ஆண்டு சமரச விழா நடை பெற்றது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கோர்ட் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் 17வது ஆண்டு சமரச விழா நடந்தது.

விழாவிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பல்கீஸ் தலைமை வகித்து பேசுகையில், சமரச மையம் என்பது சரிசெய்யும் மையமாகும்.  இந்த மையம் ஏப்ரல் 2005-ல் துவங்கப்பட்டு,  17-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.

சமரசம் என்பது ஒரு ஞானம் ஆகும்.  சமரசம் செய்யும்போது இருவரும் மனம் பொருந்தி விட்டுக்கொடுத்து தீர்வு காணப்படும்.  சமரச தீர்வு மையத்தில் காணப்படும் தீர்வுகளுக்கு மேல்முறையீடு கிடையாது.

வழக்குத் தரப்பினர்கள், தம் எதிர்தரப்பினருடன் பேசி சமரசம் செய்துகொள்ள ஏதுவாய் கோர்ட் இங்கு வழக்குகளை அனுப்புகிறது.  இங்கு நன்கு பயிற்சியளிக்கப்பட்ட சமரசர்கள் வழக்கு தரப்பினர்கள், சுமூகமான வழக்கை முடித்துக் கொள்ள உதவுவார்கள்.

இந்த சேவைக்கு வழக்குத் தரப்பினர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை.  தனிப்பட்ட முறையில் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த தனியறைகள், காத்திருக்க இடவசதி முலியவை சமரச மையத்தில் உள்ளன.  

இரு தரப்பினர்கள் தங்கள் உள்மனம் திறந்து தங்களுடைய கோபதாபங்களை தெரிவித்து எதிர்தரப்பின் நிலையை அறியவும் ஒரு வாய்ப்பாக அமையும்.  மேலும் மக்களுடைய பிரச்சினைகளுக்கு வேறு வழி தேடாமல் கோர்ட் அணுக ஒரு தூண்டுகோலாகவும் அமையும்.  

சமரச மையத்தில் முதலில் சமரசத்தைப் பற்றி தெளிவாகவும், வழக்கை முடித்துக்கொள்வதில் உள்ள நன்மைகளையும் எடுத்துக் கூறுவார்கள்.  இருதரப்பினர்களுக்கும் உடனடி பொருளாதார நன்மை கிடைத்திடவும், செலவு, நேரம் சிரமங்களை குறைத்திடவும், மனஉளைச்சலிலிருந்து விடுதலை பெறவும், நடைமுறைக்கு ஏற்ற, இணைந்து செயல்படுகிற பலவிதமான தீர்வுகளையும் பெற முடியும்.

எனவே வழக்கு தரப்பினரும், எதிர்தரப்பினரும் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சமரசத்தின் மூலம் வழக்கு சுமூகமாக தீர்க்கப்பட்டால், கோர்ட்  கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க கோர்ட் உத்தரவிடும் என தெரிவித்தார்.

Similar News