உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு- அதிகாரிகளுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தல்
துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில், அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடை-பெற்றது.
கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:-தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை சென்றடையும் வகையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தகுதி வாய்ந்த பயனாளிகள் பயன்பெறும் வகையில் அரசின் நலத்திட்ட உதவிகளை உரிய நேரத்தில் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.
துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
மேலும், தமிழக அரசால் மஞ்சப்பை பயன்படுத்த தொடர்ந்து தெரிவித்து வருவதால், மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா என்பதனை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியர்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்தும், மஞ்சப்பையினை மீண்டும் பயன்பாட்டிற்கு முழுவீச்சில் கொண்டு வருவதை குறித்தும் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத மாவட்டமாக தொடர்ந்து நீடிக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி), சரவணக்-கண்ணன் (கூடலூர்) மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.