உள்ளூர் செய்திகள்
கூத்தாண்டவர்

திருவண்ணாமலை அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழா

Published On 2022-04-09 09:58 GMT   |   Update On 2022-04-09 09:58 GMT
திருவண்ணாமலை அருகே காப்பு கட்டி கூத்தாண்டவர் கோவில் திருவிழா தொடங்கியது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வட்டம் தேவனூர் ஊராட்சியில் 100 ஆண்டுக்கும் மேலாக மக்கள் வழிபட்டு வரும் பழமையான கூத்தாண்டவர் கோவிலில் திருவிழா ஊர் பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கொரானா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. பங்குனி மாதம் கடைசி வாரம் காப்புகட்டி விழா தொடங்கப்பட்டு சித்திரை மாதம் முதல் வாரத்தில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். 

அதேபோல் இந்த ஆண்டுக்கான கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 5&ந்தேதி காப்பு கட்டி தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழா 15 நாட்களுக்கு நடைபெறும். இதில் 12 நாட்களுக்கு மகாபாரத சொற்பொழிவு நடைபெறும். வருகின்ற 18-ஆம் தேதி முன்னூற்று மங்கலம் பக்காசுரன் சோறு கொண்டு போகும் விழா நடக்கிறது.

இதைத்தொடர்ந்து 19 -ஆம் தேதி காலையில் அம்மனுக்கு கூழ் வார்க்கும் நிகழ்ச்சியும், இரவு 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்று கூத்தாண்டர் தாலிகட்டும் நிகழ்ச்சியும், கரகாட்டம் வாணவேடிக்கையுடன் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். 

பின்னர் 20-ந்தேதி கூத்தாண்டவர் வீதி உலா காலையில் தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெறும். பின்னர் திருநங்கைகள் தாலி அறுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 

விழுப்புரம் மாவட்டத்தில நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழாவுக்கு அடுத்து தேவனூர் கூத்தாண்டவர் கோவில் திருவிழா பிரசித்தி பெற்றது ஆகும். இவ்விழாவில் பெருமணம், மணலூர்பேட்டை, தாங்கள், செல்லங்குப்பம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொள்வார்கள்.
Tags:    

Similar News