வீட்டில் இயங்கி வரும் தாசில்தார் அலுவலகத்தை காலி செய்யாவிட்டால் தர்ணா போராட்டம்
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி பெரியாக்குறிச்சியை சேர்ந்தவர் அசுபதி. (வயது73). இவர் இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தனது மகனுடன் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் வடலூரில் எங்களுக்கு சொந்தமான வீட்டில் தனி தாசில்தார் நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு கடந்த 2012-ம் ஆண்டு வாடகைக்கு விடப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது வரை எங்கள் வீட்டில் வாடகைக்கு அந்த அலுவலகம் இயங்கி வருகின்றன.
தற்போது அந்த கட்டிடத்தை காலி செய்ய பலமுறை நேரில் தெரிவித்தும், எழுத்து மூலமாக தெரிவித்தும் இதுநாள்வரை காலி செய்யவில்லை. மேலும் பல மாதமாக வாடகை பாக்கி நிலுவையில் இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் பாக்கி தொகையை வங்கி மூலமாக செலுத்தினர்.
ஆனால் தற்போது எங்களுக்கு சொந்த பயன்பாட்டுக்காக எங்கள் வீட்டை காலி செய்ய வலியுறுத்தியும், இதுநாள்வரை காலி செய்யவில்லை. ஆகையால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எங்கள் வீட்டில் இயங்கி வரும் அலுவலகத்தை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் எங்கள் வீட்டை காலி செய்யாவிட்டால் வருகிற 11-ந் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.