உள்ளூர் செய்திகள்
தர்ணாவில் ஈடுபட்ட காட்சி.

காதலனுடன் திருமணம் செய்து வைக்க கோரி இளம் பெண் தர்ணா

Published On 2022-04-08 12:29 IST   |   Update On 2022-04-08 12:29:00 IST
காதலனுடன் திருமணம் செய்து வைக்க கோரி ஆட்சியரகத்தில் இளம் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
பெரம்பலூர்:

காதலனுடன் திருமணம் செய்து வைக்கக் கோரி, புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண் பெரம்பலூர் ஆட்சியரக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

புதுச்சேரி மாநிலம், முத்தியால் பேட்டை, மணிக்கூண்டு எதிரேயுள்ள ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த துரை மகள் சித்ரா (வயது 26). பிளஸ் 2 படித்துள்ள இவர், தனியார் திருமண தகவல் மையத்தில் வரன் வேண்டி பதிவு செய்திருந்தாராம். 

இதைப் பார்த்த பெரம்பலூர் மாவட்டம், அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கமல் (வயது 27) என்பவர், சித்ராவின் கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு, இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறினாராம். தொடர்ந்து, இருவரும் கைப்பேசி மூலம் அடிக்கடி பேசிக்கொண்டனராம்.

இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி சித்ராவின் கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்ட கமல், வீட்டிலுள்ளவர்கள் அவரை பார்க்க விரும்புவதாகக் கூறி, தனது ஊருக்கு வருமாறு சித்ராவிடம் தெரிவித்தாராம். இதை நம்பி, கமல் வீட்டுக்குச் சென்ற சித்ராவுடன் அவர் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, தனது ஊருக்குச் சென்ற சித்ரா மீண்டும் கமலை கைப்பேசியில் தொடர்புகொண்டபோது திருமணம் செய்துகொள்ள முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சித்ரா புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகளுடன் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற சித்ரா, தனது காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி மனு அளிக்க முயன்றார்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, ஆட்சியரகத்தில் சித்ரா மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உதவி ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Similar News