உள்ளூர் செய்திகள்
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

ஜோலார்பேட்டையில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

Published On 2022-04-07 17:06 IST   |   Update On 2022-04-07 17:06:00 IST
ஜோலார்பேட்டையில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் 11 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட் டத்தில் ஜோலார்பேட்டை ஏலகிரி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, இடி மின்னல் சூறைக்காற்றுடன் நேற்று மாலை 3 மணியளவில் ஆலங்கட்டி மழை பெய்தது. 

இதனால் கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தது. இந்நிலையில் ஜோலார் பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளம் அருகாமையில் இருந்த மரம் ஒன்று சூறைக்காற்றால் திடீரென முறிந்து தண்டவாள பகுதியில் விழுந்தது. 

இதனால் நேற்று மாலை சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் 4.35 மணிக்கு ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வந்து நின்றது. 

பின்னர் தண்டவாள பகுதியில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு ஒரு மணி நேரம் போராடி அகற்றினர். 

அதன்பிறகு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மங்களூர் நோக்கி ஜோலார்பேட்டையில் இருந்து 5.35 மணிக்கு புறப்பட்டு சென்றது. 

இதனால் ரெயில் பயணிகள் உரிய நேரத்திற்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக் குள்ளாகினர். மேலும் இந்த ஒரு மணி நேரத்தில் ஜோலார்பேட்டை மார்க்கமாக வேறு எந்த ரெயிலும் வராததால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேலும் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும்  உள்ள கடைகளிலும் மேற்கூரைகள் காற்றில் பறந்து சாலையோரம் விழுந்தது. ஜோலார்பேட்டை ஜங்ஷன், பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பலத்த காற்று வீசியதால் மேற்கூரைகள் பெயர்ந்து கிழே விழுந்தது. 

மேலும் 2 பைக் நிறுத்தும் இடம் அருகே மரம் அடியோடு சாய்ந்து விழுந்ததில் சில வாகனங்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டது. அருகில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

இதனால் ஜோலார் பேட்டை பகுதியில் நேற்று மாலை 3 மணி முதல் இன்று அதிகாலை 2 மணியளவில் வரை மின்சாரம் தடைபட்டது இதனால் தொடர்ந்து 11 மணிநேரத்திற்கு மேல் மின்சாரம் தடைபட்டது ஜோலார்பேட்டை பகுதி இருளில் மூழ்கியது இதனால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி மிகவும் அவதிப் பட்டனர்.

Similar News