உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு- ஐ.ஜி. சுதாகர் பேட்டி
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஹில்காப் தி நீலகிரி போலீஸ் என்ற புதிய ரோந்து படை தொடங்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், மே மாதத்தில் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு விழாக்களும் நடைபெற உள்ளன.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஹில்காப் தி நீலகிரி போலீஸ் என்ற புதிய ரோந்து படை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 4 இரு சக்கர வாகனங்களில் 8 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், இருவர் பெண்கள் ஆவர். இவர்களுக்கான சீருடையில் காமிரா, ஒளிரும் விளக்குகள், போதையை கண்டறியும் கருவி, வாக்கி டாக்கி போன்றவை பொருத்தப்பட்டுள்ளன.
இவர்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல முடியாவிட்டாலும், உடனடியாக அங்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு கூடுதல் உதவியையும் பெற்றுக் கொள்வர்.
மேலும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான விவரங்களை கூறி உதவியாக இருப்பதுடன், நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதோடு, போக்குவரத்து விதிமீறல்கள் இல்லாமலும் கண்காணிப்பர். இப்புதிய பிரத்யேக இருசக்கர ரோந்து வாகனங்களைத் தொடங்கி வைத்த கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்கட்டமாக நான்கு இருசக்கர வாகனங்கள் இதற்காக ஒதுக்கப் பட்டுள்ளன. இதில், ஒரு வாகனம் மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவி செய்தல் போன்றவற்றில் இவர்கள் உதவுவர்.
இத்தகைய திட்டம் தமிழகத்திலேயே முதல் முறையாக ஊட்டியில் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் நீலகிரி மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்படும். மேலும் சுற்றுலா பயணிகள் அதிகம் உள்ள இடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஸ் ராவத் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர்.