உள்ளூர் செய்திகள்
என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நிறைவு விழா
செங்குணத்தில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் அருகே உள்ள செங்குணத்தில் நீடித்த நிலையான வளர்ச்சியுடைய நீர்வழிப்பகுதி மேலாண்மை மற்றும் நில வள மேம்பாட்டில் இளைஞர்களின் பங்குஎன்ற தலைப்பில் பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா நடந்தது.
7 நாள் நடந்த முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி, செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம் ஆகியவற்றை தூய்மைப் படுத்தினர்.
கோவில் வளாகத்தில் உழவாரப் பணிகள், பொது இடங்கள் சுத்தம் செய்தல், மரக்கன்றுகள் நடுதல், தெருவிளக்கு பழுது நீக்குதல், விழிப்புணர்வு முகாம்கள் உள்ளிட்ட பல களப்பணிகளை மேற் கொண்டனர்.
இதை தொடர்ந்து நடந்த முகாமின் நிறைவு விழாவிற்கு பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சந்திரா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மைக் குழு தலைவர் கலியபெருமாள் கலந்து கொண்டு முகாமில் பணிபுரிந்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரேம்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, லயன்ஸ் கிளப் தலைவர் முரளிதரன், பொருளாளர் தமிழ்மாறன், செங்குணம் அரசு உயர் நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் சிவானந்தம், சமூக ஆர்வலர் குமார் அய்யாவு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.