திட்டக்குடி அருகே இரும்பு கடையில் திருட்டு
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாய் கிராமத்தில் எம்.எஸ்.ஆர் பழைய மரம், பழையஇரும்பு கடை நடத்தி வருபவர் சம்சுதீன் . இவர் திட்டக்குடியில் ஏ.எம்.கே., நகரில் வசித்து வருகிறார். திட்டக்குடி ராமநத்தம் மாநில நெடுஞ்சாலை ஓரம் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர் இடத்தில் தரை வாடகைக்கு எடுத்து பழைய மரம், பழைய இரும்பு சாமான்கள், அருகால், கதவு போன்ற பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் கடந்த மாதம் 17-ந் தேதி லால்குடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு திட்டக்குடி திரும்பியுள்ளார். பின் கீழ்ச்செருவாயில் உள்ள தனது குடோனுக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு குடோனை சுற்றி அமைந்துள்ள தகரத்தை எடுத்துவிட்டு அது வழியாக புகுந்து உள்ளனர்.
பின்னர் 16 டன் பழைய இரும்புக் கம்பி, 2 டன் மற்றும் அலுமினியம், பித்தளை, செம்பு, துச்தி ,கடப்பாரை உள்ளிட்ட பழைய சாமான்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.
இது குறித்து சம்சுதீன் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.