உள்ளூர் செய்திகள்
பள்ளத்தில் கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி

குன்னூர் அருகே இன்று காலை விபத்து: 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்- 3 பேர் காயம்

Published On 2022-04-06 12:17 IST   |   Update On 2022-04-06 12:17:00 IST
குன்னூர் அருகே இன்று காலை 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விப்பத்தில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் பாய்ஸ் கம்பெனி பகுதியில் இருந்து இன்று காலை கோவைக்கு ஒரு கார் வந்தது.

இந்த காரில் டிரைவர் உள்பட 3 பேர் பயணித்தனர். கார் மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கே.என்.ஆர் பகுதியில் கார் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.இதனால் கார் தாறுமாறாக அங்கும் இங்கும் ஓடியது. சிறிது நேரத்தில் சாலையை விட்டு வெளியேறிய கார் சாலையொட்டி இருந்த 50 அடி பள்ளத்திற்குள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காரில் இருந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்து காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்.. என்று அபய குரல் எழுப்பினர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் ஓடி வந்து மீட்கும் பணியில் இறங்கினர்.

மேலும் குன்னூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் கயிறு கட்டி கீழே இறங்கிய தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அங்கிருந்து சிகிச்சைக்காக 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 3 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள் குன்னூர் பாய்ஸ் கம்பெனி பகுதியை சேர்ந்த கணவன், மனைவி என்பது தெரியவந்தது. ஆனால் அவர்களின் பெயர் விவரம் தெரியவில்லை. மேலும் அவர்கள் 2 பேரும் தங்கள் டிரைவருடன் காரில் கோவைக்கு ஒரு வேலை வி‌ஷயமாக சென்றபோது இந்த விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News