உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலைஅருகே தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி
திருவண்ணாமலைஅருகே தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் ஓம் சக்தி நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.இதனால் இந்த பகுதியில் வசித்து வரும் 500&க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று பகலிலும் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.அது மட்டுமின்றி இரவிலும் மின்தடை ஏற்பட்டது. எதற்காக மின்தடை செய்யப்படுகிறது? என்பது தெரியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலையும் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் வீட்டில் தங்கள் பணிகளை செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். குழந்தைகள், முதியவர்கள் ஓய்வெடுக்க முடியாமல் தவித்தனர்.மேலும் பல்வேறு அலுவலக பணிகளும் பாதிக்கப்பட்டது.
எனவே அறிவிக்கப்படாத இந்த மின் தடைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.