உள்ளூர் செய்திகள்
சஸ்பெண்டு

நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடு புகார்- சிந்திலுப்பு வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்டு

Published On 2022-04-05 06:27 GMT   |   Update On 2022-04-05 06:27 GMT
சிந்திலுப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட இணைப்பதிவாளர் மற்றும் பொதுப்பணி நிலை திறன் அதிகாரம் அமைப்பின் தலைவர் சீனிவாசன் உத்தரவிட்டார்.
குடிமங்கலம்:

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே உள்ள சிந்திலுப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக கூறி விவசாயிகள் பலர் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தாராபுரம் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மணி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

மேலும் சிந்திலுப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2021-ம் ஆண்டு மார்ச் 31ல் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தள்ளுபடியான விவசாய நகைக்கடன் குறித்த உண்மை நிலையை கண்டறிய குடிமங்கலம் கூட்டுறவு சார்பதிவாளர் ஆனந்த குமாரை விசாரணை அதிகாரியாக நியமித்து துணைப்பதிவாளர் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் கூட்டுறவுத்துறையின் ஆணைகளை பின்பற்றாமல் தனது கடமை மற்றும் பொறுப்புகளிலிருந்து தவறியதற்காகவும், புகார் தொடர்பாகவும் சிந்திலுப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் தண்டபாணியை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட இணைப்பதிவாளர் மற்றும் பொதுப்பணி நிலை திறன் அதிகாரம் அமைப்பின் தலைவர் சீனிவாசன் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News