உள்ளூர் செய்திகள்
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தபோது எடுத்த படம். அருகில் கலெக்டர் முருகேஷ்.

சாத்தனூர் அணையில் இருந்து 105 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு

Published On 2022-04-04 14:57 IST   |   Update On 2022-04-04 14:57:00 IST
சாத்தனூர் அணையில் இருந்து 105 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாகும். தற்போது இந்த அணையில் 97.50 அடி தண்ணீர் உள்ளது.
கோடை காலம் தொடங்கி விட்டதால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சாத்தனூர் அணை பாசனத்திற்காக இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் உத்தரவுபடி இன்று காலை சாத்தனூர் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை கால்வாயில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். 

அப்போது கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் பிரதாப்,துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி ,பெ.சு.தி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷனி மற்றும் செயற்பொறியாளர் சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் சாத்தனூர் அணை பாசன நிலங்கள் 7 ஆயிரத்து 743 ஏக்கருக்கு இடது மற்றும் வலது புற கால்வாய்களில் முறையே வினாடிக்கு 140 கன அடி மற்றும் வினாடிக்கு 160 அடி ஆக மொத்தம் 300 கன அடி வீதம் இன்று முதல் வருகிற 19.5.202 வரை 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

மேலும் திருக்கோவில் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு பகுதியில் 5ஆயிரம் ஏக்கருக்கு இரண்டாம் போக சாகுபடிக்கு 800 மில்லியன் கன அடி நீரினை நீர் பங்கீடு விதிகளின்படி ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விவசாயிகளின் கோரிக்கையின்படி தேவைப்படும் பொழுது மூன்று தவணைகளில் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. 

எனவே பாசன நீரினை சிக்கனமாகவும் துறை பணியாளர்களின் அறிவுரையும் சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு பாசன ஆயக்கட்டுதாரர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

அறிவிக்கப்பட்ட தேதிக்கு மேலும் எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் தேதி நீட்டிக்க படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்த பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் உத்தரவின்படி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் 105  ஏரிகள் நிரப்பப்பட்டு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் விடப்படும்.

இதன் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 12 ஆயிரத்து 543 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். உரிய காலத்தில் தண்ணீர் திறப்பதால் பயிர்கள் கருகாமல் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News