உள்ளூர் செய்திகள்
கைது

புதுவையில் கள்ளநோட்டு புழக்கம்: கள்ளநோட்டு அச்சடிக்க எந்திரங்கள், மை வழங்கிய ஊட்டி வாலிபர் கைது

Published On 2022-04-03 05:16 GMT   |   Update On 2022-04-03 05:16 GMT
மதுபான கடையில் கள்ளநோட்டு கொடுத்ததாக பிள்ளை தோட்டத்தை சேர்ந்த ஜெயபால், மனோஜ், சரண், கமல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி:

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருவள்ளுவர் சாலை மதுபான கடையில் கடந்த மார்ச் 7-ந் தேதி, ஒருவர் ரூ.500 கொடுத்து மது வாங்கினார். அப்போது அந்த நோட்டை வாங்கி பார்த்த ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் விரைந்து வந்து, அந்த நோட்டை வாங்கி பார்த்தபோது, அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே மதுபான கடையில் கள்ளநோட்டு கொடுத்ததாக பிள்ளை தோட்டத்தை சேர்ந்த ஜெயபால், மனோஜ், சரண், கமல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2.42 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளநோட்டு வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த பிரதீப், ரகுபதி, நாகூர் மீரான், தமீன் அன்சாரி, சரண்ராஜ் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் எங்கிருந்து கள்ளநோட்டு தயாரிக்கும் எந்திரங்கள் வாங்கப்பட்டது என்று விசாரிக்கப்பட்டது.

அப்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அச்சகம் நடத்தி வரும் தாமஸ் அமலோற்பவ ராஜ்(39) என்பவர் கள்ளநோட்டு தயாரிக்க தேவையான எந்திரங்கள் மற்றும் மை உள்ளிட்டவற்றை வாங்கி தந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரை கைது செய்வதற்காக சிறப்பு தனிப்படையினர் ஊட்டிக்கு வந்தனர். பின்னர் ஊட்டியில் தாமஸ் அமலோற்பவ ராஜை கைது செய்து, புதுச்சேரி அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி விட்டு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News