உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் போராட்டம் செய்த காட்சி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாட்டை உருவாக்குவதாக விவசாயிகள் நூதனப்போராட்டம்

Published On 2022-04-02 15:59 IST   |   Update On 2022-04-02 15:59:00 IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாட்டை உருவாக்குவதாக விவசாயிகள் கண்களைக் கட்டிக்கொண்டு நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 மாத காலமாக யூரியா தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் யூரியா தட்டுப் பாடு பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தி திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு என்.ஆர்.உழவர் பேரவை மாவட்டத் தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார். 

இந்த போராட்டத்தின் போது, புருஷோத்தமன் தனது கண்களை துணியால் கட்டி மறைத்து கொண்டு யூரியா எங்கே? என்று தேடுவது போன்றும், மற்ற விவசாயிகள் யூரியா கிடைக்காது என்று தெரிவித்து புருஷோத்தமன் மீது வண்ண பொடிகளை வீசி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், திருவண்ணா மலை மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கரில் விவசாயபயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக ஏக்கருக்கு இரண்டு மூட்டை யூரியா வீதம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஆனால் உர விற்பனை கடைகளில் ரூ 300 க்கும் விற்பனை செய்யவேண்டிய யூரியாவை ரூ 700 முதல் ரூ 800 வரை விற்பனை செய்கின்றனர்.

குறைந்த விலையில் கிடைக்க வேண்டிய யூரியா தங்களுக்கு கிடைக்காத நிலையில் விவசாயிகள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் யூரியாவை தனியார் நிறுவனங்கள் வாங்கி கலப்படம் செய்து விற்பனை செய்து வருகின்றன.

யூரியா உரத்துக்கு செயற் கையான தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளனர்.இதுபற்றி கேட்டால் விவசாயிகள் தங்கள் வேலைக்கு இடையூறு செய்வதாக வேளாண் அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

எனவே இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்து யூரியாவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகளின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். தற்காலிக உரிமம் ரத்து என்பது கண்துடைப்பு நடவடிக்கை ஆகும். 

மேலும் ஒவ்வொரு உரகடையிலும் இருப்பு விவரங்களை எழுதி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Similar News