உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தொடர் கொள்ளையால் பொதுமக்கள் அச்சம்

Published On 2022-04-02 14:59 IST   |   Update On 2022-04-02 15:26:00 IST
பெரம்பலூரில் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பெரம்பலூர் :

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தொடரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். இரு மாவட்ட பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கோவில் உண்டில், வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம்  தொடர் கதையாகி இருக்கிறது.

நேற்றைய தினம் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள திராவிடநல்லூர் கிராமத்தில் வசித்து வரும் பா.ம.க.வை பிரமுகரும்,  ராங்கியம் பகுதி ஒன்றிய கவுன்சிலருமான புகழேந்தி வீட்டில் கொள்ளையர்கள் புகுந்தனர். பின்னர் ரூ. 4 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தாலி சங்கிலியை கொள்ளையடித்து சென்றனர்.

இதற்கிடையே கருக்கை கிராமத்தில் தனியாக வசித்து வரும் சந்திரா என்ற மூதாட்டி வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அவரின் 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மாபாளையம் தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் அரசு பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது வீட்டில் நேற்று நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் 37 பவுன் நகைகள், ரூ.55 ஆயிரம் பணத்தை அள்ளிச் சென்றனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.


இந்த பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரத்தில் போலீசாரின் ரோந்து மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.இதை கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.  

சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களும் திருடப்பட்டு வருகிறது. சாலையில் செல்பவர்களை மடக்கி வழி பறி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இது குறித்து இப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், தொடர்ந்து நடைபெறும் இந்த கொள்ளை சம்பவங்களால் ஒரு வித அச்சத்திலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கலெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர் கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்று புள்ளி வைக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Similar News